உலக பட்டினி தினம்.. 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு.. தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

 

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக பட்டினி தினம் (மே 28) அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. ஒருவர் கூட பசி பட்டினியால் வாட கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை இன்று (மே 26) வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகப் பட்டினி தினமான மே 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றிப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவு வழங்கினர். தற்போது, கட்சி தொடங்கிய பிறகு, முதன்முதலாக கட்சி சார்பில் மக்களுக்கு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மக்களுக்கு உணவு வழங்குவது குறிப்பிடத்தக்கது.