மகளிர் உரிமை தொகை ரூ.1,000.. புதிய பயனாளிகளுக்கு இன்று தேடி வரும் நற்செய்தி!

 

புதிதாக இணைக்கப்பட்ட 7.35 லட்சம் பயனாளிகள் உள்பட 1.14 கோடி மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை இன்று வழங்கப்படவுள்ளது.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், மேல்முறையீட்டின் மூலம் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை இன்று வழங்கப்படவுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளைய தினமே அமைச்சர்கள் தலைமையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது. மாதம் 15-ம் தேதி உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.