மகளிருக்கு மாதம் ரூ. 3,000 உரிமைத்தொகை.. 133 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 20-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விரைவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் 133 அம்சங்கள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும் எனவும் உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வலியுறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.