காருடன் நீரில் மூழ்கிய பெண்.. சகோதரரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்றபோது விபரீதம்!

 

சிதம்பரத்தில் கார் ஓட்ட பயிற்சி பெற்றபோது காருடன் ஆற்று நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் மாலன் ஜுவல்லரி என்ற நகைக் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் மங்கேஷ் குமார். இவரது மனைவி சுபாங்கி (47). இவர் தனது சகோதரர் ராம்தேவிடம் கார் ஓட்ட கற்றுக் கொடுக்குமாறு கேட்டார். அப்போது ராம்தேவும் ஒப்புக் கொண்டு தனது சொந்த காரில் சுபாங்கிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தார். சுபாங்கி இன்று காலை சிதம்பரத்திலிருந்து தெற்கு பிச்சாவரம் வரை காரை ஓட்டினார்.

இந்நிலையில் தெற்கு பிச்சாவரத்தில் உள்ள பாலம் அருகே கார் சென்றுவிட்டு மீண்டும் சிதம்பரம் நோக்கி காரை சுபாங்கி ஓட்டி வந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள உப்பனாற்றில் பாய்ந்து உள்ளே விழுந்தது. உடனே அவரது உறவினர் ராம்தேவ் காரில் இருந்து வெளியே குதித்துவிட்டார்.

ஆனால் காருக்குள் இருந்த சுபாங்கி மாட்டிக் கொண்டார். இதில் கார் முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதில் சுபாங்கி சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காரை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். 

உள்ளே இறந்த நிலையில் சுவாங்கி இருந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது ஆற்றில் கார் மூழ்கி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.