மர்ம காய்ச்சலால் பெண் பரிதாப பலி.. ஆவடியில் சோகம்!

 

சென்னையில் மர்ம காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி நந்தவனம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (52). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (46). இவர் தனியார் நிறுவன ஊழியர். இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கலையரசி கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் காய்ச்சல் குறைந்துள்ளது. 

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், கலையரசிக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் நரம்பு தொடர்பான மர்ம காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், உடல் நிலை மோசமானதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இரவு 8 மணி அளவில், மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். இது ஒருபுறம்இருக்க, கலையரசி மகன் ஸ்ரீதர் (22), கடந்த சில நாட்களாக காய்ச்சலால் ஆவடி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்த தனியார் மருத்துவமனை, அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த நிலையில், அவருக்கு மர்ம காய்ச்சலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கலையரசி இறப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம், கலையரசியை உள்நோயாளியாக அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. அதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல, தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தினாலும் சில மருத்துவமனை அதை பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, ஆவடி மாநகர நல அலுவலர் மரு.ம.யாழினி கூறுகையில், “தொடர் மர்ம காய்ச்சல் எதிரொலியாக, ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்படி, தனியார் மருத்துவமனைகளுக்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில், காய்ச்சலின் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும்” என்றார்.