திமுகவில் சேர்கிறாரா? கல்யாண வீட்டில் செங்கோட்டையன் பேச்சால்  கோபி அதிமுகவில் சலசலப்பு!!

 

பாஜகவை நம்பிப் பயன் இல்லை, திமுகவுக்கே போய்விடலாம் என்று கூறிவரும்  ஆதரவாளர்களின் பேச்சுக்கு செவி சாய்க்கத் தொடங்கியுள்ளார் செங்கோட்டையன் என்று கோபி வட்டாரத்தில் பேசப்படுகிறது, எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக அதிமுகவுக்கு செங்கோட்டையனை தலைமையேற்க வைக்கப் போவதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதிமுக தலைவர் ஒருவர் தான் என்று அமித் ஷா முதல் அண்ணாமலை வரை கூறி வந்தனர்.

கட்சித் தலைமை கிடைக்காவிட்டாலும் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று செங்கோட்டையனும் அமைதி காத்து வந்தார். தற்போது வெளியான கருத்துக் கணிப்புகளில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளார் என்று பல்டி அடிக்கத் தொடங்கி விட்டது. அண்ணாமலை கூட எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளார் என்று ஏற்றுக் கொண்டு விட்டார்.

ஓ.பன்னீர்செல்வத்தைப் போல் தன்னையும் ஆசை காட்டி அரசியலில் காணாமல் செய்து விடுவார்களோ என்ற அச்சம் செங்கோட்டையனுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொங்குப் பகுதிகளுக்கு பொறுப்பாளரான செந்தில் பாலாஜியும் தன்னாலான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருவதால், திமுகவுக்கு செல்வதே அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என்ற முடிவுக்கு செங்கோட்டையனும் வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மாநில அளவில் பொறுப்பு, அடுத்த ஆட்சியில் முக்கிய அமைச்சர் பொறுப்பு என்ற உறுதிமொழி திமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாம். கொங்குப் பகுதியில் அதிமுகவிலிருந்து திமுகவுக்குச் சென்ற முத்துசாமி, செந்தில் பாலாஜி கட்சியிலும் ஆட்சியிலும்  நல்ல நிலையில் இருப்பதைப் போல் செங்கோட்டையனுக்கும் வாய்ப்பு உறுதி என்று கூறப்படுவதால் செங்கோட்டையன் திமுக பக்கம் செல்வதில் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம், 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என கூறியதாக தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா? என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் முடிவெடுத்தால் தேர்தல் பணிகளைத் தொடங்க வசதியாக இருக்கும் என்று திமுக தரப்பிலும் கூறப்படுவதால்,இனியும்  காலத்தை வீணாக்க வேண்டாம் என்ற முடிவுக்கு செங்கோட்டையன் வந்து விட்டாராம்.