செங்கோட்டையனை ஒதுக்கி வைப்பது ஏன்? எடப்பாடி பழனிசாமியின் திட்டமும் செங்கோட்டையனின் திண்டாட்டமும்!!

 

செப்டம்பர் 4ம் தேதி மனம் விட்டுப் பேசப்போகிறேன் என்று ஊடகங்களுக்கு தீனி போட்டுள்ளார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் ஓராண்டுக்கு மேலாகவே சுமுகமான உறவு இல்லை. தற்போது நேரில் பார்த்து ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்ளும் நிலை கூட இல்லாமல் போய் விட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாக செங்கோட்டையனுக்குத் தான் முதலமைச்சர் பதவி கிடைத்தது. வைட்டமின் ப இல்லாமல் தான் அந்தப் பதவி கிடைக்கவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டது. ஒரு வேளை செங்கோட்டையன் முதலமைச்சர் ஆகியிருந்தால் அதிமுக இப்படி நான்காக உடைந்திடாமல் அரவணைத்துச் சென்றிருக்கக் கூடும். தன் நலத்தை விட கட்சி நலமே பெரிது என்ற எண்ணம் கொண்ட மூத்த தலைவர் அவர். வாழ்நாள் முழுவதும் ஒரே கட்சியில் இருப்பவரும் ஆவார்.

அதிமுக - பாஜக கூட்டணி உருவான நாள் முதலாகவே கூட்டணி ஆட்சி, முதலமைச்சர் அதிமுக தலைவர் தான் என்று அமித்ஷா முதல் அண்ணாமலை வரை அனைத்து பாஜக தலைவர்களும் நாள்தோறும் சொல்லி வந்தனர். அது தான் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் மீது வெறுப்பை உருவாக்கியது. செங்கோட்டையன் அமித் ஷாவை தனியாக சந்தித்து வந்தது முதல், தன்னுடைய முதலமைச்சர் நாற்காலிக்கு செங்கோட்டையன் தான் வில்லனாக வருவார் என்று எடப்பாடி பழனிசாமி கணித்து விட்டார்.

போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றால் தானே அமைச்சர், முதலமைச்சர் ஆக முடியும். போட்டியிட வாய்ப்பே கொடுக்கா விட்டால்? இது தான் எடப்பாடி பழனிசாமியின் வியூகம். கோபி தொகுதிக்கு புது  வேட்பாளர் தேடுவது செங்கோட்டையனுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? பாஜகவும் எடப்பாடி பக்கம் முழுவதுமாக சாய்ந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாள்ர் என்று அண்ணாமலையே அறிவித்து விட்டார். 

கட்சியில் போட்டியிடக் கூட வாய்ப்பு கிடைக்காமல் அவமானப்பட்டு இருக்க வேண்டுமா என்பது தான் செங்கோட்டையன் முன் உள்ள ஒரே கேள்வியாகும்.என்ன செய்தால் தன்னுடைய அரசியல் வாழ்க்கை நீடிக்கும் என்று தெரியாத நிலையில் தான் செங்கோட்டையன் இருக்கிறார்.

திமுகவிலிருந்து சிவப்புக் கம்பள விரிப்புடன் வரவேற்பு காத்திருந்தாலும், முடிவு செய்ய முடியாத நிலை தான் செங்கோட்டையனுக்கு. சசிகலா, ஓ.பி.எஸ், டி,டிவி தினகரன் ஆகிய மூவரையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து செங்கோட்டையன் தலைமையில் ஆட்சியை அமைத்து விடலாம். அதிமுகவும் சிதறு தேங்காயாகவே இருக்கும், பாஜகவை அதிமுக வாக்குகளால் வளர்த்து விடலாம் என்ற பாஜகவின் எண்ணத்திற்கு எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணம் வேட்டு வைத்து விட்டது.

எல்லா மாவட்டத்திலும் கட்சித் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டதை கண்கூடாகக் காண முடிகிறது. பாஜகவுடனான கூட்டணி மட்டுமே தொண்டர்களுக்கு நெருடலாக இருக்கிறது. ஒரு வேளை கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை கழட்டி விட்டு விட்டால் பாஜக நிலைமை பரிதாபமாக மாறிவிடும் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளனர் பாஜகவினர்.

இந்த திருப்பங்களால் தன்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்து விடும் என்ற நிலையில் தான் மனம் நொந்து போய் உள்ளார் செங்கோட்டையன். திமுக பக்கம் போவாரா அல்லது அதிமுகவில் தான் தொடர்கிறேன் என்று அமைதி காப்பாரா செங்கோட்டையன்? செப்டம்பர் 5ம் தேதி செங்கோட்டையன் எந்தப் பாதையில் பயணிக்கப் போகிறார் என்பதற்கான விடை கிடைக்கக் கூடும்.

- ஸ்கார்ப்பியன்