எங்கு திரும்பினாலும் விஜய்.. விஜய்... ஆட்சியைப் பிடிச்சிடுவாரோ?

 

அதிமுகவை தொடங்குவதற்கு முன்னதாக 1949ம் ஆண்டு திமுக தொடங்கிய காலம் முதலாகவே அரசியலில் இயங்கி வந்தவர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த திமுக அரசு மீதும் திமுக கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்தி 1972ம் ஆண்டு கட்சியைத் தொடங்கினார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியும் ஏற்றார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து 3 தடவை வெற்றி பெற்று 13 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி,ஆரைப் பார்த்து அரசியலுக்கு வந்த நண்பர் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாருமே அரசியலில் ஜொலிக்கவில்லை. டி.ராஜேந்தர் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் சரத்குமார் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராமராஜன் ஒரு தேர்தலில் திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்களை விட கொஞ்சம் கூடுதல் வெற்றியைப் பெற்றவர் விஜயகாந்த். தமிழ்நாடு அரசியலில் முக்கிய சக்தியாக வந்திருக்க வேண்டியவர் இரண்டாவது தேர்தலில் அதிமுக கூட்டணி, அடுத்து மக்கள் நலக் கூட்டணி என கிடைத்த செல்வாக்கை இழந்தும் விட்டார். அவருடைய உடல்நிலையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கவில்லை என்பதால் விஜய்காந்தின் தேமுதிக மற்றொரு கட்சியாக மாறிப்போனது.

நீண்டகாலமாக எதிர்ப்பார்ப்பை தன் மீது வைத்திருந்த ரஜினிகாந்த், கடைசியில் கட்சி தொடங்குவதாக அறிவித்து ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான செலவையும் இழுத்து வைத்தார். கடைசியில் கொரோனாவை காரணம் காட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே கட்சியைக் கலைத்தும் விட்டார் ரஜினி. ரசிகர்களின் பணமும் நேரமும் வீணாகிப் போனது தான் மிச்சம்.

ரஜினிக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டும் 2021 சட்டமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகள் சிலவற்றை இணைத்துக் கொண்டும் போட்டியிட்டார். இது முதலுக்கே மோசம் என புரிந்து கொண்டவர் 2024 தேர்தலில் திமுக அணியில் ஐக்கியமாகி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆகிவிட்டார். அந்த வகையில் ரஜினி அரசியலை விட கமல் அரசியல் வெற்றி தான்.

ரஜினி, கமல் இருவரையும் சீண்டிக் கொண்டே கட்சியைத் தொடங்கினார் விஜய். மற்ற நடிகர்களை விட மிகவும் வித்தியாசமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி அவதாரம் எடுத்தார். பாதிக்கப்பட்ட மக்களை வீட்டுக்கு அழைத்து நிவாரணம் வழங்கினார். தலைவர்களின் படத்திற்கு வீட்டிலேயே மாலை அணிவித்து மரியாதை செய்தார். இரண்டு மாநாடுகளை நடத்திவிட்டு, திடீரென்று சினிமா கேரவனை எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். சென்ற இடமெல்லாம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய செய்தியாக வரவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

41 உயிர்களைப் பலி வாங்கிய கரூர் கூட்டம் விஜய் யின் அரசியலுக்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த துயரத்தை அரசியலாக்க முதலமைச்சர் விரும்பாவிட்டாலும். பாஜக, அதிமுக வினர் அரசியலாக்கினார்கள். வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து தங்கள் அணியில் சேர நிர்ப்பந்திப்பதாகக் கூறப்படுகிறது. 

கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு ட்வீட், ஒரு வீடியோ தவிர இறந்த குடும்பதினருடன் வீடியோ கால் மட்டுமே செய்துள்ளார் விஜய். ஆனால் இந்த துயரத்திற்குப் பிறகு  தமிழ்நாட்டு அரசியலில்  ஒரு நாள் கூட விஜய் பெயர் இல்லாமல் நகர்வுகள் இல்லை என்றாகிவிட்டது. எல்லா தொலைக்காட்சி சேனல்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏதாவது ஒரு விஜய் தொடர்பான செய்தியைப் பிடித்துக் கொண்டு விவாதங்கள் நடத்துகின்றனர்.

இது எல்லாம் ஒரு தற்காலிக வெளிச்சமாகவே தெரிகிறது. அடுத்து ஒரு முக்கிய அரசியல் நகர்வு ஏற்படும் வரையிலும் விஜய் விஜய் என்று பேசிக் கொண்டே இருப்பார்கள். என்ன தான் குட்டிக் கரணம் அடித்தாலும் 2026 தேர்தல் விஜய் க்கானது அல்ல. 2026ல் விஜய் முதலமைச்சர் ஆவது என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று தான்.

- ஸ்கார்ப்பியன்