மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும்? வெளியான முக்கிய அறிவிப்பு!

 

மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் எப்போது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று புலம்பி வந்தனர். 

இதனையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மேல்முறையீடு செய்யும் காலகட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை எப்போது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். இம்மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14-ம் தேதியே வங்கியில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.