TNPSC குரூப்-2 தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் சொன்ன அப்டேட்!
டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55,041 தேர்வர்கள் எழுதினர்.
ஆனால், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கேட்டபோது, குரூப்-2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டு பணிகள் 80% நிறைவடைந்து விட்டதாகவும், எஞ்சிய 20% பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனால் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப்-2 தேர்வு முடிவு குறித்த தேதி அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம், டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.