என்னாச்சு? முழு சந்திரமுகியாக மாறிப் போன எடப்பாடி பழனிசாமி!!

 

மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் தனக்கு விருப்பமான பவுர்ணமி நாளில்  தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் முதல் நாளே விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசு மீது பழியைப் போட்டார். அதே மத்திய அரசு அமைத்துள்ள பாஜகவிடம் தான் கூட்டணி வைத்துள்ளோம் என்ற சிந்தனை இல்லாமல் இப்படி ஒரு பதிலைச் சொல்லி மாட்டிக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

அடுத்ததாக கோவில் பணத்தில் கல்லூரிகளை எப்படிக் கட்டலாம்? கோவில் பணத்தை வைத்து கோவில் தானே கட்ட வேண்டும். கல்லூரி கட்டுவதற்கு அரசுப் பணத்தைத் தான் செலவு செய்யவேண்டும் என்று புதிதாக ஒரு முழக்கத்தை எழுப்பினார். இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரின் சிந்தனையும் விருப்பமும் ஆகும். என்ன நேரத்தில் சொன்னாரோ உடனடியாக எல்லாப் பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இவரே பழனியில் அறநிலையத் துறை சார்பில் பொறியியல் கல்லூரியைத் திறந்து வைத்தவர் தான்.

அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர், பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.இப்போது தங்கள் ஆட்சியில் செய்த செயலை எதிர்த்து கருத்துத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கடன் வாங்கியாவது, சொத்தை விற்றாவது பிள்ளைகளை படிக்க வைக்க விரும்புகிறவர்கள் தமிழர்கள். இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து பாஜகவிடம் கட்சி கரைவதை விட, இந்தத் தேர்தலில் தோற்றுத் தான் பாஜகவிடமிருந்து கட்சியைக் காப்பாற்ற முடியும் என நினைத்து விட்டாரோ தெரியவில்லை. எடப்பாடியின் பேச்சைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரும்  திமுக பக்கம் சாயத் தொடங்கி விட்டார்கள்.மீதம் இருப்பவர்களும் பாஜகவுக்கு ஓட்டுப் போடப்போவதில்லை. எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம் பலித்து மீண்டும் திமுக பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்

- ஸ்கார்ப்பியன்