விஜய் க்கு காங்கிரஸ் முன் வைக்கும் கேரளா மாடல்? பரிசீலிக்கிறாரா ராகுல் காந்தி?
கரூர் துயரச் சம்பவம் நடந்த நொடி முதல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேகமாக மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். 100க்கும் மேற்பட்டவர்களின் சிகிச்சைக்காக அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
சிகிச்சைக்கான பணிகளை முன்னின்று செயல்படுத்திய செந்தில் பாலாஜிக்கு உயிர் பிழைத்தவர்கள் நிச்சயம் பெரும் நன்றியை தெரிவிப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவரைச் சுற்றியே ஒரு அரசியல் விளையாட்டை விஜய் தரப்பு தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்காமல் விஜய் கட்சியின் நிர்வாகிகளாக அறியப்படும் அனைவருமே ஒட்டு மொத்தமாக எஸ்கேப் ஆகிவிட்டனர்.
ஒரு வேளை விஜய் அங்கேயே தங்கியிருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுருந்தால், அரசியல் களம் அவருக்கு சாதகமாகத் திரும்பியிருக்கக் கூடும். நடந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது என்பது ஒரு பக்கம் இருக்க, இடத்தை விட்டு ஓடிப்போய் விட்டார் என்ற கோழை முத்திரை விஜய் மீது நீண்டகாலம் பதிந்திருக்கும்.
தவறுக்கு மேல் தவறு என்பது போல், செய்தியாளர்களை சந்திக்காமல் அமைதி காத்தது, முதலமைச்சருக்கு சவால் விடும் வகையில் வீடியோ வெளியிட்டது என எல்லாமுமே விஜய் க்கு எதிராகவே திரும்பியுள்ளது. முன் ஜாமின் கோரிய வழக்கில் புஸ்ஸி ஆனந்த் நடந்தது ஒரு விபத்து என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அரசின் சதி என்பதை விஜய் தரப்பே நீதிமன்றத்தில் மறுத்து விட்டது.
முதலமைச்சர் மிகவும் கண்ணியத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் விஜய்க்கு ஆதரவான மனநிலையிலேயே கருத்து தெரிவித்து இருந்தார். விஜய் யை கைது செய்யும் எண்ணம் அவரிடம் துளியும் இருக்க வில்லை. ஆனால் இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்க மறந்த விஜய் தரப்பு பாஜக பக்கம் ஓடியது. ஒரே ஒரு நல்ல விசயமாக காங்கிரஸ் கதவையும் தட்டினார்கள். ராகுல் காந்தியும் விஜய் யுடன் பேசியிருக்கிறார்.
வழக்கை காரணம் காட்டி விஜய் யை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பாஜக தீவிர முயற்சிகள் எடுப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்குள் சென்று விட்டாலே விஜய் என்ற பிம்பம் உடைந்து விடும். அவரும் பத்தோடு பதினோறு அரசியல்வாதி ஆகிவிடுவார். இங்கு தான் காங்கிரஸ் கட்சி விஜய் க்கு தெம்பு அளிக்க முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
”உடன் இருக்கும் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் கழட்டி விடுங்கள். 1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலாவை ஒதுக்கி வைத்தார் அல்லவா!! அதைப் போல் கரூர் துயரச் சம்பவத்தில் இவர்கள் என்னை தவறாக வழிநடத்திவிட்டார்கள் என்ற பழியைப் போட்டு கட்சியிலிருந்து நீக்குங்கள். அவர்கள் மீது சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படட்டும்.
2026 தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டபடி தனியாகவோ அல்லது விஜய் தலைமையில் கூட்டணி வைத்தோ சந்தியுங்கள். உங்கள் மக்கள் செல்வாக்கை நிருபித்துக் காட்டுங்கள். உங்களுக்கான தனித்துவ அடையாளமும் காப்பாற்றப்படும். முடிந்தால் எதிர்க்கட்சியாகக் கூட வெற்றி பெறுங்கள்.
இந்தத் தேர்தலில் திமுகவை விட்டு காங்கிரஸ் கட்சி வெளியே வர முடியாது.2029 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. இந்தியா கூட்ட்டணியில் திமுக முக்கியமான கட்சி. இங்கு கூட்டணி மாறினால் தேசிய அளவில் பாதிப்பு ஏற்படும்
2031 சட்டமன்றத் தேர்தலில் காட்சிகள் மாறும். ஒன்றியத்தில் திமுக கூட்டணி அங்கம் வகித்தாலும் கூட, மாநிலத்தில் கேரளா போல் நாங்கள் வேறு அணி அமைக்க முடியும். கேரளாவில் இடது சாரி கூட்டணி ஆட்சி என்றாலும், அந்த கூட்டணியின் எம்.பி.க்கள் இந்தியா கூட்டணிக்குத் தான் ஆதரவு தருவார்கள்.
அதே கேரளா ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் அறிமுகப் படுத்துவோம். திமுக அணி ஒரு பக்கமும், காங்கிரஸ் அணி இன்னொரு பக்கமுமாக மாநிலத்தில் இருக்கலாம். ஒன்றியத்தில் பாஜகவுக்கு எதிரான அணியில் தமிழ்நாடு காங்கிரஸ் அணி , திமுக அணி எம்.பி.க்கள் இருக்கலாம். கேரளா ஃபார்முலா ஏன் தமிழ்நாட்டில் வெற்றிபெறக் கூடாது” என்று ஆசை வார்த்தைகள் காட்டியுள்ளதாம் காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் தயவைக் கொண்டு திமுக அரசிடமிருந்து விஜய் தப்பித்துக் கொள்ளலாம். பாஜகவுடன் அணி சேராமல் தனித்தன்மையும் நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதால் விஜய் இது குறித்து ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.
- ஸ்கார்ப்பியன்