அதிமுகவுக்கு என்னாச்சு? மைத்ரேயன் திமுகவில் தாக்குப் பிடிப்பாரா?
அன்வர் ராஜா, கார்த்தி தொண்டைமான், மைத்ரேயன் என முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ என அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறிவாலயம் நோக்கிச் செல்லும் நேரத்தில் தான் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிக்கையும் வருகிறது. அது வரையிலும் இவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் அதிமுக தலைமைக்கு தெரியாமல் இருந்தது பெரிய ஆச்சரியம் தான்.
தொடர் ஓட்டப்பந்தயம் போல் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிக் கொண்டிருக்கும் அரசியல் விளையாட்டு நடந்து வரும் வேளையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபடுவது தான் ஆச்சரியமாகவும் இருக்கிறது, இருவரும் மறுப்புத் தெரிவித்தால் கூட, அரசியலில் மறுப்புத் தெரிவிப்பது தான் கட்சித் தாவலுக்கு முதல் அறிகுறி என்பது அறிவிக்கப்படாத விதியாக இருக்கிறது.
விலகிச் செல்பவர்களால் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று எடப்பாடி காட்டிக் கொண்டிருந்தாலும் அவருக்குள் ஒரு கலக்கம் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் தம்பிதுரையை இடைமறித்துப் பேசியது எடப்பாடி பழனிசாமியின் பதட்டத்தையே காட்டியது. இன்னும் யார் யார் எடப்பாடி பழனிசாமிக்கு கல்தா கொடுத்து விட்டு அதிமுக
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்த மைத்ரேயன் திமுகவில் சேர்ந்து இருப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதை விட திமுக எப்படி ஒரு பிராமண வகுப்பைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்த ஒருவரை கட்சியில் இணைத்துக் கொண்டது என்பதுவும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதுவரையிலும், திமுகவில் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதே கிடையாது.
எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் பிராமணர்களையும் கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் வாய்ப்பளிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து விட்டாரா? அல்லது அதிமுகவிலிருந்து வரும் முன்னணித் தலைவர்களை வரவேற்றுக் கொள்வோம் என்ற அரசியல் கணக்கா? ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளிலிருந்து திராவிட மாடல் கொள்கைகளுக்கு மைத்ரேயன் மாறிவிட்டாரா? அல்லது திமுக முகாமுக்குள் அனுப்பப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்லா? என பல்வேறு கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
காலம் தான் இதற்கான பதில்களைச் சொல்லும். இப்போதைக்கு. அதிமுக கோட்டையின் செங்கல்கள் சரியத் தொடங்கியிருப்பதும் அதை திமுக பத்திரப்படுத்தி வைப்பதுமாகத் தான் தெரிகிறது.
-ஸ்கார்ப்பியன்