இன்ஸ்டாகிராம் லைக்ஸ்க்காக இளைஞர் செய்த செயல்.. தட்டி தூக்கிய போலீசார்.. வைரல் வீடியோ!

 

இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் லைக்குகளுக்காக இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக இளைஞர்கள் சிலர் பைக்குகளில் சாகசம் செய்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஆபத்தான முறையில் அவர்கள் செய்கின்ற சாகசம் அவர்களுக்கு மட்டுமில்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் அந்த சாகசங்கள் இடம்பெறுகின்றன. இது குறித்த வீடியோக்கள் வெளியாகும்போது, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது அவ்வப்போது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் இளைஞர் ஒருவர் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இளைஞர் வீலிங் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் போலீசாரின் கண்ணில் சிக்கவே, வீலிங் செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் செங்கல்பட்டு அடுத்துள்ள புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் கோகுல் என்பது தெரியவந்தது. இவர், மகேந்திரா சிட்டி பகுதியில், உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள மல்ராசபுரம் பகுதியில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து கோகுலை கைது செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கோகுல் மீது பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோகுலுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. லைசன்ஸ் இல்லாமலே, இளைஞர் கோகுல் இது போன்ற விபரீதங்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

A post shared by Mt_Gokul (@duke._.gokul)

அண்மையில் திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வீலிங் செய்தவரே பட்டாசுகளை வெடித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்களும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.