2026ல் ஒரு சீட் கூட கிடைக்காது.. அமைச்சர் சேகர் பாபு ஆவேசம்!!

 

மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியதற்கு, இருக்கும் 4 எம்.எல்.ஏ.க்கள் கூட பாஜகவுக்கு கிடைக்காது. பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ கூட வெற்றி பெற முடியாது என்று இந்து அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர் பாபு கூறியுள்ளார்.

சென்னை சூளையில் உள்ள அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

”2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ 400 தொகுதிகளை தாண்டி வெல்வோம் என்றதை இந்தியா கூட்டணி முறியடித்து கிட்டத்தட்ட இழுபறியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது தான் பெரிய மாற்றமாக உள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். தற்போது பாஜவிற்கு தமிழக சட்டப்பேரவையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு பாஜ சட்டமன்ற உறுப்பினர் கூட தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையமாட்டார்கள். இதுதான் அந்த மாற்றமாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.