ரூ.2,000 நோட்டு வாங்க மாட்டோம்.. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

 

பெட்ரோல் பங்குகளில் நாளை முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப் புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போகினர்.

அதேசமயம், ரிசர்வ் வங்கி புதிய ரூ 500 மற்றும் 2,000 நோட்டுகளை வெளியிட்டது. பணப் புழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ரூ.2,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதையடுத்து, 2018-19 நிதியாண்டில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி முற்றிலுமாக நிறுத்தியது.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு பிரச்சனைகள் குறைந்துள்ளதாலும், நாட்டின் பண பரிமாற்றத்திற்கு இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதாலும் ரூ. 2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாது அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில் பெட்ரோல் பங்க்குகளில் இன்று மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற 2 நாட்கள் மட்டுமே காலக்கெடு உள்ளது. இன்றைய தினம் வங்கி விடுமுறை நாளையும் நாளை மறுநாளும் 29, 30ம் தேதிகளில் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்பதால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.