சங்கிகளின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 

சங்கிகளின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமுஎகச சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா, கோரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது, ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உதயநிதி உருவபொம்மை எரித்தும், உதயநிதி படங்களை தீ வைத்துக் கொளுத்தியும் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில் ஒன்றில், உதயநிதி படத்தை கால் மிதியாக பயன்படுத்தி, அதன் மீது கால் வைத்து மிதித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல, ஆந்திராவிலும் ஒரு கோவிலில் உதயநிதி ஸ்டாலின் படத்தை கால் மிதியாக பயன்படுத்தி உள்ளனர்.

அண்மையில் திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தின்போது பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மம் மீது எனக்கு அதிக அக்கறை உண்டு. தமிழ்நாட்டை சேர்ந்த இளம் அரசியல்வாதி ஒருவர் சனாதன தர்மம் ஒரு வைரஸ் என்றும் அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படி அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர்களைப் பற்றி பேச முடியுமா? இந்துகள் ஒற்றுமையாக இல்லாததே இதற்கு காரணம். அதனால்தான் பலர் நம் மீது ஏறி சவாரி செய்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலின் - பவன் கல்யாண் ஆதரவாளர்கள் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் நடந்தன. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் படத்தை வாசல் படிகளில் ஒட்டி அதனை கால் மிதியாக பயன்படுத்தி மிதித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

துணை முதல்வர் உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

கழக உடன்பிறப்புகள் இதைக் கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை - உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.