வயநாடு நிலச்சரிவு.. விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி!

 

ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல்வரிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வழங்கினார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நிலச்சரிவில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  

வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே கேரள மாநிலத்துக்கு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவையொட்டி பேரிடர் நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.