விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 82.48 சதவீத வாக்குகள் பதிவு

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து,  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அதிமுக போட்டியில் இருந்து விலகி கொண்டதால், திமுகவுக்கு போட்டியாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நின்றனர். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருந்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். 278 வாக்குச்சாவடிகளில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக 6 மணியளவில் நிறைவடைந்தது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 95,536 பேரும், பெண்கள் 99,944 பேரும், வாக்களித்துள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று பதிவான வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.