கோயம்பேடு வளைவிற்கு ‘விஜயகாந்த் சதுக்கம்’.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு ‘கேப்டன் விஜயகாந்த் சதுக்கம்’ என பெயரிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த 28-ம் தேதி காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், விஜயகாந்த்திற்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கேப்டனுக்கு தலைமை கழகத்திலேயே மிகப் பெரிய சமாதி அமைக்கவிருக்கிறோம். நீங்கள் எல்லாரும் கேப்டன் விஜயகாந்த்திற்கு மண் எடுத்துப் போட்டு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஊருக்கே சோறுபோட்ட அவர் இல்லை என்றபோது, எங்களால் சாப்பிட முடியவில்லை. எங்களுக்கு ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் கேப்டன் முகம் தான் தெரிகிறது” என்று கூறினார்.

இந்த நிலையில், கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு ‘கேப்டன் விஜயகாந்த் சதுக்கம்’ என பெயரிடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள், கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.