சறுக்கி விழுந்த விஜய்.. சீறிப் பாயும் சீமான்!! மாறும் தமிழ்நாடு அரசியல் களம்!!

 

கரூர் துயரச் சம்பவம் நடந்ததும் தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கனத்த அமைதி நிலவியது. நடந்த துயரத்திற்கு யாரும் விஜய் மீது கை நீட்டவில்லை. மாறாக, விஜய் மீது ஒரு அனுதாபமே ஏற்பட்டது. புதுசா அரசியலுக்கு வர்ற தம்பிக்கு இப்படி ஒரு பெரு விபத்து நடந்து விட்டதே என்ற அக்கறை கலந்த அனுதாபம் தான் எழுந்தது. ஆனால், அதையடுத்து விஜய் நடந்து கொண்ட விதம், அதே மக்களுக்க்கு விஜய் மீது கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

சம்பவ இடத்திலிருந்து உடனடியாகச் சென்று விட்டதை மக்கள் பெரும் குற்றமாக கருதவில்லை. இருந்திருந்தால் அவர் மீதான மதிப்பு உயர்ந்திருக்கும் என்ற அளவிலேயே அது பார்க்கப்பட்டது. விஜய் வெளியிட்ட வீடியோ தான் அவருக்கு வில்லனாக மாறியுள்ளதை அறிய முடிகிறது. அவருடைய வீடியோவில் இறந்தவர்கள் குடும்பங்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை தெரியவில்லை. மனசார வருத்தம் தெரிவிக்கவில்லை. பொறுப்புடன் நடந்து கொண்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்ட முதலமைச்சருக்கு சவால் விட்டு பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்ட பெண்களையும் பெரியவர்களையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது.

விஜய் அமைதியாகவே இருந்திருந்தால் கூட டேமேஜ் குறைவாகத் தான் இருந்திருக்கும். மேலும் அரசு 10 லட்சம் அறிவித்த நிலையில் முந்திக் கொண்டு 20 லட்சம் ரூபாய் அறிவித்து இன்று வரையிலும் அதற்கான நடவடிக்கைகளை செய்யாதது, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட மற்ற பொதுமக்களுக்கு விஜய் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக துடைந்தெறிந்து விட்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய் தனியாக போட்டியில் இருந்திருந்தால், திமுக அரசு மீதான அதிருப்தியாளர்களின் மொத்த வாக்குகளும் விஜய் க்கே சென்றிருக்கும். மேலும் அரசு மீது அதிருப்தியிலிருக்கும் சிறுபான்மை மக்கள், புதிய வாக்காளர்களில் கணிசமான சதவீதத்தினர், விஜய் ரசிகர்கள் என ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்திருந்திருப்பார். 2026ல் வெற்றி இல்லை என்றாலும் 2031ல் விஜய் க்கு சாதகமான களமாக மாறியிருக்கும். கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் ரசிகர்களின் வாக்குகள் மட்டுமே அவரிடம் உள்ளது. புதிய வாக்காளர்களுக்கும் பாஜக என்றால் அலர்ஜி தான். விஜய் யின் பாஜக சார்பு நிலைத் தோற்றம் அவர்களை விஜய் யிடமிருந்து தள்ளிப் போகச் செய்கிறது.

அதிருப்தியாளர்கள் மற்றும் அதிருப்தி சிறுபான்மையினரும் விஜய் யிடமிருந்து விலகி விட்டனர். இவர்களிடம் இழந்த நம்பிக்கையை 6 மாதத்திற்குள் மீட்டெடுப்பது இயலாத காரியம். விஜய் யிடமிருந்து விலகும் வாக்காளர்களுக்கு சீமான் மாற்று சக்தியாகத் தெரிகிறார். தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கும் சீமானுக்கு 2026 தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் சில தொகுதிகளில் வெற்றியும் சீமானுக்கு சாத்தியம் என்று தெரிகிறது.

விஜய் வரவால் சீமானின் வாக்கு வங்கி தான் காலியாகும் என்று கருதப்பட்ட நிலையில் சீமானின் பலம் அதிகரிக்கும் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிகிறது போலும். கரூர் துயரத்திற்குப் பிறகு சீமானின் போக்கில் சற்று நிதானம் தெரிகிறது. கொஞ்சம் சீரியஸான அரசியல்வாதி போல் பேசத் தொடங்கியுள்ளார். தேர்தல் பணிகளும் சீமான் தரப்பில் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. மக்களிடம் தங்களின் பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல ஏ.ஐ உள்பட நவீன தொழில்நுட்பங்களை சீமான் கட்சியினர் சத்தமில்லாமல் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அரசியலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தா விட்டால் மீண்டும் அதே வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. விஜய் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து தனியாக களமாடி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் வலுப்பெறும் என்று தெரிகிறது. சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் வியப்பில்லை. 2031ல் திமுகவுக்கு சவாலாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

- ஸ்கார்ப்பியன்