கொடி ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் தவெக கொடி?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் அரசியல் ஆர்வத்தில் தான் இருக்கிறார். அதற்கு அச்சாரமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது அமைப்பு, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அன்றே கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும் முழு அரசியலில் ஈடுபடும் பொருட்டு படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளியே இருக்கும் நிலையில் சினிமாவில் இனி நடிப்பது சிரமம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கிடையே மாணவர்கள் சந்திப்பு ட்விட்டரில் வாழ்த்து அரசியல் என பிசியாக இருந்த விஜய் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் மாநில மாநாட்டை நடத்துவதற்கு ஆரம்பத்திலேயே சிக்கல் எழுந்தது. மாநாட்டுக்காக இடம் தருவதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர்கள், பிறகு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே விஜய் மாநாடு நடத்த இருப்பதாகவும், இதற்காக இடம் தேர்வு உள்ளிட்டவை முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு மாநாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
வருகிற 22-ம் தேதி கட்சி கொடி அறிமுக விழா நடைபெற உள்ள நிலையில், கொடியேற்றி ஒத்திகை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் மஞ்சள் நிற கொடியின் நடுவே விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற உடை அணிந்து, ஒத்திகை கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதுபோல் உள்ளது. வாகை மலருக்குள் விஜய் உருவம் மஞ்சள் நிறத்தில் உள்ளது.