துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வைகோ போட்டி? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை?
துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பிற்கு மீண்டு தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் மஹாராஷ்ட்ரா ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். இது குறித்து பாஜக தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் யார் என்பதற்கான ஆலோசனை இன்று நடைபெற உள்ளது. மாநிலங்களவையிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற மதிமுக தலைவர் வைகோ வின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றப் புலி என பாராட்டுகளைப் பெற்ற நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர், ஒன்றிய அரசு நடைமுறைகளை நன்றாக அறிந்தவர் என வைகோ இந்தப் பொறுப்புக்கு மிகவும் சரியான தேர்வு என்று கருதப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தவர், மூத்த பாஜக தலைவர் என சி.பி.ராதாகிருஷ்ணன் பெயர் பரிசீலிக்கப்பட்டாலும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அரசியலும் இந்தத் தேர்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு தமிழரை எதிர்த்து துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக வாக்களித்தது என்ற அவப்பெயரை சுமத்தும் வகையில் இந்த நகர்வு இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக வைத்துள்ள செக் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த அரசியல் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில் வைகோ வை களம் இறக்குவதோடு மட்டுமல்லாமல், சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் கோரவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தென்னிந்தியர் வட இந்தியர் என்ற போட்டி சூழல் உருவாதை தடுக்கும் வகையிலும் வைகோவின் தேர்வு சரியானதாக இருக்கும். சி.பி.ராதாகிருஷ்ணனை விட வைகோவுக்கு அனைத்துக் கட்சியிலும் மதிப்பு உண்டு என பல கோணங்களில் வைகோவின் தேர்வுக்கு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டத்தான் மஹாராஷ்ட்ரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வந்திருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போதே முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு எதிரான நகர்வுகளை தொடங்கி விட்டார் என்றும் தெரிகிறது.
வாக்குத் திருட்டு என்று பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வைகோ போட்டியிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வைகோ வை வெற்றி பெறவைக்க முடியும் என்ற நம்பிக்கையும் இந்தியா கூட்டணி தரப்பில் தெரிகிறது.
2024 தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், வைகோ ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப் படுவதறகான சூழல் இருந்தது குறிப்பிடத் தக்கது.