அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார்? முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என பல தரப்பு திமுக நிர்வாகிகள் அவ்வப்போது குரலெழுப்பி வந்தனர். இந்த நிலையில் உதயநிதியை துணை முதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்  திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். உடனே அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமலே இருந்தது.

அவருக்கு அமைச்சரவையில் எப்போது இடம் வழங்கப்படும்? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பை உள்ளிட்ட பல திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இதுகுறித்துக் கட்சியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “கோரிக்கை வலுத்திருக்கிறது. இன்னும் பழுக்கவில்லை” என்று கூறி இருந்தார். 

தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுக சொன்னதைத்தான் செய்வோம். சொல்வதைத்தான் செய்வோம். நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. உத்தரவு மட்டுமே இன்னும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.