பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாப பலி.. கோவில் திருவிழாவின்போது பைக் சாகசத்தால் விபரீதம்

 

குரும்பூர் அருகே கோவில் திருவிழாவின்போது பைக் சாகத்தில் ஈடுபட்ட 2 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள குழைக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானம். இவரது மகன் ஜீவா என்ற ஜீவரத்தினம் (22). இவர், மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் பிரதீப்குமார் (23).  லோடு ஆட்டோ டிரைவர். இருவரும் நண்பர்கள். இந்நிலையில் குழைக்கநாதபுரத்தில் உள்ள கட்டையன் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.     

விழாவில் கலந்து கொள்ள 2 பேரும், மற்றொரு நண்பரான ஆறுமுகநேரி பச்சைபெருமாள் நாடார் தெரு கண்ணன் மகன் பூபதிராஜாவை (22) அழைத்துள்ளனர். அவரும் இரவு கொடை விழாவில் கலந்து கொண்டு விட்டு, இவர்களுடன் பைக்கில் சுற்றியுள்ளார். இதற்கிடையே இரவு 11.30 மணியளவில் நெல்லை - திருச்செந்தூர் ரோட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் சாகசம் செய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஜீவரத்தினமும், பிரதீப்குமாரும் எதிரெதிரே பைக்குள் ஓட்டியவாறு சாகசம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த 2 பைக்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த ஜீவரத்தினம், பிரதீப்குமாா் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரும்பூர் போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயங்களுடன் இருந்த பூபதிராஜாவை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிசிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.  இந்த விபத்து குறித்து குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லாபாய் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.