ஒரே நாளில் யானைகள் தாக்கி 2 தொழிலாளிகள் பலி.. நீலகிரியில் அதிர்ச்சி!

 

நீலகிரி அருகே யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவன் எஸ்டேட் பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் மாதேவ் (50). இவர், இன்று காலை 8 மணியளவில் தேயிலை தோட்டங்களுக்கு தண்ணீர் விடும் பணிக்காக பம்ப் செட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று, திடீரென மாதேவை தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பிற தொழிலாளர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போல் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள மசனகுடி மோயார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (51) என்பவர் இன்று காலை வழக்கம் போல் பணிக்காக கிளம்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென நாகராஜை தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரது சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுள்ள இந்த யானை தாக்குதல்கள் காரணமாக கூடலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. வனத்துறை தொடர்ந்து ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும், குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.