டூ வீலர் மீது வாகனம் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. பெரம்பலூர் அருகே சோகம்!

 

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமம் முருகன் நகரை சேர்ந்தவர் ராஜா. கொத்தனாரான இவருக்கு நித்திஷ் (14) என்ற மகன் இருந்தார். திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா வெங்கடத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இதேகிராமம் மேற்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் கோகுல் (13). பேரளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 11.15 மணியளவில் நித்திஷ், தனது தந்தைக்கு சாப்பாடு கொடுக்க நண்பன் கோகுலுடன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் சென்றார். பின்னர், மீண்டும் அதே வாகனத்தில் வீடு திரும்பினர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் ஆர்ச் அருகில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். 

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 சிறுவர்களையும் அப்பகுதியினர் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். நண்பனை அழைத்துக் கொண்டு தந்தைக்கு சாப்பாடு கொடுக்க சென்று திரும்பும் வழியில் நடந்த எதிர்பாராத விபத்தில் இருவர் பலியான சம்பவம் கவுல்பாளையம் கிராமத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.