நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாநில அரசு பேருந்துகள்.. அலறித் துடித்த பயணிகள்!

 

கன்னியாகுமரி அருகே தமிழ்நாடு மற்றும் கேரள அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள மாநில அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் களியக்காவிளை பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இரண்டு பேருந்துகளும் வந்து கொண்டிருந்த போது, நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, களியக்காவிளை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

அங்கு கேரள மாநில அரசுப் பேருந்து ஓட்டி வந்த அனீஷ் கிருஷ்ணன் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இரண்டு பேருந்துகளும் அதிவேகத்தில் இயக்கப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.