கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி.. 3 பேர் மாயம்.. பூண்டி மாதா கோவில் அருகே சோகம்!

 

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு வந்த சென்னையை சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் நேரு பார்க் ஹவுசிங் போர்டில் வசித்து வருபவர் ஜான்சன். இவரது மகன்கள் பிராங்கிளின் (23), ஆண்டோ (20), மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஜியாவுதின் மகன் தமிழரசன் (20) சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் கலைவேந்தன் (20) ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மண்ட வெங்கடேஷ் மகன் மண்ட மனோகர்(19)ஆகிய 5 பேரும் என அவர்களுடன் மொத்தம் 17 பேர் வேளாங்கண்ணிக்கு வந்துவிட்டு பூண்டி மாதா கோவில் தரிசிக்க இன்று காலை வந்துள்ளனர்.

வந்தவர்கள் மகிமைபுரம் அருகில் உள்ள கொள்ளிடம் ஆறு அருகில் சமையல் செய்ய இறங்கியுள்ளனர். அங்கு சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த ஐந்து பேரும் அந்த பகுதியில் உள்ள சந்தன மாதா கோவில் அருகே கொள்ளிட ஆற்று தண்ணீரை பார்த்ததும் தண்ணீரில் இறங்கி குளிக்க முடிவு செய்து தண்ணீரில் இறங்கி குளித்த பொழுது எதிர்பாராதமாக தண்ணீரில் 5 பேரும் மூழ்கினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களில் கலைவேந்தன் மற்றும் தமிழரசன் ஆகிய இரண்டு பேரையும் அருகில் இருந்தவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து உடனடியாக திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட தமிழரசன் மற்றும் கலைவேந்தன் உடல்களை திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைப்பற்றி பூதலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பிராங்கிளினினுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.