பொங்கல் தொகுப்பு பெற இன்றே கடைசி நாள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற இன்றே கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 90 சதவீதம் வரை பயனாளர்கள் பொங்கல் தொகுப்பை பெற்றுச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு, ரொக்கப் பணம் மீதம் இருந்தால் இன்று மாலை சரக அலுவலகங்களில் ஒப்படைக்க பணியாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற இன்றே கடைசி நாள் என்பதால் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பொங்கல் தொகுப்பை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் டோக்கன் வழங்கப்படாத தகுதி வாய்ந்த பயனாளர்களுக்கும் இன்று பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் ரூ. 1,000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கியதில் மோசடி ஏதாவது நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை ஒருவருடைய ரேஷன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க 1957, 1800 425 5901 ஆகிய எண்களுக்கு (Help Line Number) அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்கும் வண்ணம் வந்த இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.