2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் பலி.. வாய்க்காலில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்!

 

திருப்பூர் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்காலில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாய்க்கால் முழுவதும் தண்ணீர் நிரம்பிச் சென்று வருகிறது. தற்போது கடுமையான கோடைக் காலம் என்பதால், ஏராளமானோர் விடுமுறையை கழிப்பதற்காக இந்த வாய்க்காலில் குளிப்பதற்காக வருகை தருகின்றனர்.

அந்த வகையில் நேற்று திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ், அதே பகுதியைச் சேர்ந்த வீணா (17), பிரீத்தா (18) ஆகிய 3 பேரும் வாய்க்காலுக்கு குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். பிஏபி வாய்க்காலுக்கு நேற்று மதியம் அவர்கள் சென்ற நிலையில், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் அவர்கள் கிடைக்காததால், அவினாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று பொங்கலூர் அருகே தேவனாம்பாளையம் என்ற இடத்தில் பிஏபி வாய்க்கால் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் வீணா மற்றும் பிரீத்தா ஆகிய இருவரின் உடல்கள் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசி பாளையம் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டனர்.

தொடர்ந்து மாயமான சந்தோஷை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது உடல் பொங்கலூர் அருகே கண்டெடுக்கப்பட்டது. மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் பிஏபி வாய்க்காலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் மாணவர்களை வாய்க்காலில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவினாசி பாளையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.