ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் பரிதாப பலி.. வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்!

 

வெள்ளியங்கிரி மலைக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்த 3 பேர் அடுத்தடுத்து ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறி சென்றால், அங்கு காட்சியளிக்கும் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கலாம். இரவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்றாலும், பங்குனி மாதத்தில் இந்த மலைக்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்றனர். இதற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரைச் சேர்ந்த சுப்பாராவ் (68) என்பவர் 4வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்தார். இதே போல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவரும் முதலாவது மலையிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். சுமை தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு வனத்துறையினர் மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (40) என்பவர் நண்பர்களுடன் மலையேறிக் கொண்டிருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலையும் அடிவாரத்துக்கு கொண்டு வந்த வனத்துறையினர், பின்னர் போலீசார் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வெள்ளியங்கிரி மலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதயக் கோளாறு உள்ளவர்கள், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்கள் உள்ளிட்டோர் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினரும் போலீசாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.