ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது.. ஷாக்கிங் பின்னணி

 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வீடு கட்டி வந்தார். கடந்த 5-ம் தேதி அந்தப் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது அவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். அந்த படுகொலை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு குறித்தும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு , திருவேங்கிடம் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 5 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் திமுக, அதிமுக, பாஜக, தாமக, தேமுதிக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேங்கிடம் போலீஸ் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினர் பிரதீப் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் ஊர்காவல் படையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கின் முக்கியப்புள்ளியாக கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்று மேலும் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தர்மராஜ் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூலம் வெடிகுண்டு சப்ளை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள், இவர்கள் மூலமாக சப்ளை செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.