ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாப பலி.. எரிவாயு சிலிண்டர் கசிவால் நேர்ந்த சோகம்!

 

செங்கல்பட்டில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பெரியமணியக்கார தெருவில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சதாம் (30) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரோஜி குத்தூன் (24). இந்த தம்பதிக்கு ரஜியா பர்வீன் (8) என்ற மகளும், சாய்பலி (5), அப்தாப் (2) என்ற 2 மகன்கள் இருந்தனர். செங்கல்பட்டு ரயில்வே கேன்டீனில் சதாம் சமையல் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சதாம் வேலைக்கு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை வீட்டில் இருந்த அவரது மனைவி ரோஜி குத்தூன் குழந்தைகளுக்கு இரவு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சமையல் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் வீடு முழுவதும் தீப்பிடித்தது. இதில் தாய் ரோஜி குத்தூன் மற்றும் 3 குழந்தைகளும் 80 சதவீத பலத்த தீக்காயங்களுடன், உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாய் ரோஜி குத்தூன், மூத்த மகள் ரஜியா பர்வீன் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மகன்களான சாய்பலி, அப்தாப் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த 8 வயது மகள் ரஜியா பர்வீன் இன்று காலை பரிதாபமாக பலியானார். அதே சமயம், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அப்தாப் மற்றும் சாய்பலி பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீஸ் எஸ்ஐ டில்லிபாபு சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும், தீ விபத்தில் பலியான 3 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி, அந்தந்த அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.