ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி.. ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

தூத்துக்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு சந்தியா (13), கிருஷ்ணவேணி (10) ஆகிய 2 பெண் குழந்தையும், இசக்கிராஜா (7) என்ற ஒரு மகனும் இருந்தனர். அப்பகுதியில் உள்ள பள்ளியில் சந்தியா 7-ம் வகுப்பும், கிருஷ்ணவேணி 5-ம் வகுப்பும், இசக்கிராஜா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 குழந்தைகளும் தங்களது உறவினர்களுடன் பேரூரணியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். உறவினர்கள் அனைவரும் கரையோரம் குளித்து கொண்டிருந்தபோது, குழந்தைகள் மூவரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் சந்தியா, கிருஷ்ணவேணி, இசக்கிராஜா ஆகிய 3 பேரும் குளத்தில் மூழ்கினர்.

நீச்சல் தெரிந்தவர்கள் மூன்று குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தைகள் மூவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அனைவரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். இதுதொடர்பாக தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 3 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.