போட்டியை காண சென்ற இளைஞர் பலி..  வார்பட்டு மஞ்சுவிரட்டில் நேர்ந்த சோகம்!!

 

பொன்னமராவதி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போட்டி போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது வழக்கம். அந்த வகையில் மஞ்சுவிரட்டு போட்டியானது வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று. இந்த நிலையில் திருமயம் அருகே உள்ள புதுவயல் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரது மகன் சிவகுமார் என்கிற சிவா (25) என்பவர் மஞ்சுவிரட்டு போட்டியை காண வந்திருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக காளை ஒன்று சிவாவை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த சிவா நாளை வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்த நிலையில் காளை முட்டி பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.