அருவியில் குளிக் சென்ற இளைஞர்.. செல்ஃபியால் பறிபோன உயிர்.. தேனியில் சோகம்!

 

தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் அருவியில் குளிக் சென்ற இளைஞர், செல்ஃபி எடுத்த போது பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி சிவராம் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காளீஸ்வரி. இந்த தம்பதியின் மகன் சதீஷ்குமார் (23). இவருடைய அப்பா இறந்த நிலையில், தன்னுடைய தாய் காளீஸ்வரியுடன் வசித்து வந்தார். சதீஷ்குமார் தேனியில் உள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சதீஷ்குமார் தேனி அல்லிநகரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர், நண்பர்களுடன் கோவிலுக்கு மேற்குப்புறம் உள்ள மலைப்பகுதியில் வழுக்குப்பாறை என்ற இடத்துக்கு சென்றிருக்கிறார். அந்த வழுக்குப்பாறை பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதற்கிடையே சதீஷ்குமார் அங்கு பாறையில் நின்றுகொண்டு செல்போனில் செல்ஃபி எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி பாறையில் இருந்து வழுக்கி விழுந்தார். இதில், பாறையின் இடுக்கில் உள்ள தண்ணீரில் சதீஷ் குமார் மூழ்கினார். அப்போது அவருக்கு தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த நண்பர்கள், சதீஷை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து தேனி அல்லிநகரம் போலீசாருக்கும், தேனி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்களும், அல்லிநகரம் போலீசாரும் விரைந்து வந்தனர். இரவில் தான் சதீஷை பலத்த காயங்களுடன் மீட்க முடிந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மலையில் இருந்து தரைப்பகுதிக்கு சதீஷை கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தாய் காளீஸ்வரி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தேனி அல்லிநகரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவில் பகுதியில் உள்ள வழுக்குப்பாறைக்கு ஏராளமான சிறுவர்கள் அடிக்கடி குளிக்க செல்கிறார்கள். அங்கு ஏராளமானோர் குளிப்பதையும், செல்ஃபி எடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஆபத்தான பகுதியாகும். இங்கு வனவிலங்குகள் நடமாட்டமும் உண்டு.

வீரப்ப அய்யனார் கோவிலுக்கு வரும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளிக்கிறார்கள். எனவே தேனி வழுக்குப்பாறையில் சென்று குளிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். இதற்கு வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.