திடீரென மயங்கி விழுந்த அரசுப் பள்ளி மாணவிகள்.. இடைவேளையில் வாங்கிய குளிர்பானத்தில் விபரீதம்!

 

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் குளிர்பானம் அருந்திய நிலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியில் ஆற்காடு நாராயணசாமி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியில் 500-க்கும் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த வகையில் ஜனனி, இலக்கியா என்ற இரு மாணவிகள் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இன்று காலை இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளனர்.

அப்போது உடன்படிக்கும் சக வகுப்பு தோழியான தாரணி என்பவர் இரண்டு குளிர்பானங்களை கொடுத்துள்ளார். அதை ஜனனியும் இலக்கியாவும் அருந்தியுள்ளனர். அருந்திய சில மணிநேரங்களிலேயே இருவரும் மயக்கமாக இருந்துள்ளனர். அதனை கண்ட ஆசிரியை தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்தார்.

மேலும் மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து மாணவிகளை ஒப்படைத்துள்ளனர். பெற்றோர்கள் இரு மாணவிகளையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மயக்கம் அடைந்த இரு மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் கூறுகையில் தங்களுடன் படிக்கும் தாரணி என்ற மாணவியிடம் இரண்டு குளிர்பானங்களை கொடுத்து குடிக்க சொன்னதாகவும் அதை தாங்கள் குடித்ததால் தங்களுக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதாக கூறுகின்றனர். இவர்களுக்கு குளிர்பானம் அளித்த மாணவியின் தந்தை அரசு மதுபான கடையில் பணி செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும்போது, இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு வரும்போது தள்ளாடிக்கொண்டு வந்ததாகவும் உடனே பெற்றோர்களை அழைத்து ஒப்படைத்ததாகவும் மேற்கண்ட இரு மாணவிகளின் தன்னுடன் படிக்கும் மாணவியிடம் குறிப்பிட்ட குளிர்பானத்தை வாங்கி கொண்டு வரச் சொல்லி குடித்ததாக தலைமை ஆசிரியர் தகவல் தெரிவிக்கிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.