மாற்று சமூகத்தவரை காதலித்த அக்கா.. வெட்டி சாய்த்த தம்பி.. நெல்லையை உறைய வைத்த கொலை!

 

நெல்லை அருகே மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த இளம்பெண்ணை, சகோதரரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர் பாண்டியன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு தங்கத்தாய் (20) என்ற மகளும், முத்து (18) என்ற மகனும் உள்ளனர். முத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார். தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டில் இது தொடர்பாக அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரம் அடைந்த முத்து அரிவாளால் சகோதரி என்று கூட பாராமல் தங்கத்தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழையூத்து போலீசார், தங்கத்தாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.

விசாரணையில் காதல் விவகாரத்தில் தங்கத்தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். ப்ளஸ்-2 வரை படித்திருந்த தங்கத்தாய், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருடன் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்ய பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும், அதனை தங்கத்தாய் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர். நேற்றும் மாப்பிள்ளை பார்ப்பது சம்பந்தமாக காலை முதல் வீட்டில் இருந்தவர்கள் சண்டையிட்டு வந்த சூழலில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்து வீட்டின் முன்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.