திடீர் மழைக்கு மக்களிடையே பக்தி குறைந்ததுதான் காரணம்.. மதுரை ஆதினம் பரபரப்பு பேட்டி
மக்கள், இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் திடீர் மழைக்கு காரணம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பரவலாக மழை பெய்தது. அதிலும் நேற்று காலை பல இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததுடன், ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இவை அனைத்தையும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர், அமைச்சர்கள், துணை முதல்வர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையைத் தவிர கோவை, மதுரை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, இன்றைய தலைமுறைகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை.
கோவில் இடங்களை வைத்திருப்பவர்கள் எல்லாம் சரியாக குத்தகை கொடுப்பதில்லை. அதனால்தான் பருவம் தவறி மழை பெய்கிறது. மக்கள், இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் திடீர் மழைக்கு காரணம் என்று கூறினார்.