கப்பலில் கிரேன் உடைந்து விழுந்து ஆபரேட்டர் பரிதாப பலி.. தூத்துக்குடி துறைமுகத்தில் பயங்கரம்!

 

தூத்துக்குடி துறைமுகத்தில் எகிப்து நாட்டிற்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்ட கப்பலில் உள்ள கிரேன் உடைந்து விழுந்து கிரேன் ஆபரேட்டர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பனமா நாட்டில் உள்ள கியானா கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரியானது ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதனை, எஸ்தோ லேபர் காண்ட்ராக்ட் மூலமாக, தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மீனவர் காலனி பகுதியை சேர்ந்த பாரத் (40), என்பவர் கப்பலில் உள்ள கிரேன் மூலமாக லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென, கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே விழுந்துள்ளது. இதில் கிரேனுக்கு அடியில் சிக்கி இருந்த பாரத்திற்கு கிரேன் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மற்றோரு கிரேன் மூலமாக பாரத் என்பவர் மீட்கப்பட்டுள்ளார். சக ஊழியர்கள் பாரத்தை மீட்டு வஉசி துறைமுக ஆம்புலன்ஸ் மூலமாக வஉசி துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

தொடர்ந்து அப்போது மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிதுறைமுக கப்பல் வஉசி துறைமுகத்திற்குள் வரும் பட்சத்தில் கப்பலில் உள்ள பொருட்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் சோதனையிட வேண்டும். அதன் பின்னரே கப்பலில் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் சோதனை செய்வதில்லை என கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடே இந்த கோர சம்பவம் நடைபெற்றதாக வஉசி துறைமுக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.