திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்காத தாய்.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

 

திங்கள்சந்தை அருகே கோவில் விழாவுக்கு செல்ல தாயார் அனுமதிக்காததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள புதுவிளை சானல்கரை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், தீபக் ராஜ் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் தீபக் ராஜ் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தீபக் ராஜ் பக்கத்து ஊரில் நடைபெற்று வரும் கோவில் திருவிழாவுக்கு சென்று வர தனது தாயாரிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவரது தாயார் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த தீபக்ராஜ் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்ற தாயார் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்தார்.

கதவை தட்டியும் திறக்காததால் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தீபக் ராஜ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிச்சி அடைந்தார். உடனே, தீபக் ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீபக் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து டேவிட் ராஜ் இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவுக்கு செல்ல தாயார் அனுமதிக்காததால் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.