கழிவுநீர் கால்வாயில் விழுந்து தத்தளித்த சிறுமி.. உடனே குதித்துக் காப்பாற்றிய இளைஞன்!! பதைபதைக்கும் வீடியோ

 

தேனியில் சாக்கடை வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி பங்களாமேடு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஒட்டுநர் முத்து. இவரது மகள் கீர்த்தனா (4). இவர் நேற்று மாலை கழிவுநீர் வாய்க்கால் அருகே கீர்த்தனா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமி கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டு சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். 

அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் ஓடிவந்து கழிவு நீர் கால்வாயில் மூழ்கிய சிறுமியை துரிதமாக செயல்பட்டு மீட்டெடுத்து சிறுமியின் உயிரை காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தேனி நகரின் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லப்படும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ள நிலையில், அதனை அகற்றி முறையாக தூர்வாரப்படாததால் கழிவு நீர் கால்வாயாக மாறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், முறையாக தடுப்புச் சுவர் ஏற்படுத்தாமல் இருப்பதால் சிறுவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக விளங்கி வருகிறது.