ஜூனியர் மாணவருக்கு மொட்டை.. கோவை கல்லூரியில் ராகிங் கொடுமை.. சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது!

 

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஜூனியர் மாணவர்களுக்கு மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்ததாக 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்தும் கோவை விமான நிலையத்தில் இருந்தும் 5 கி.மீ. தூரத்தில் இந்த கல்லூரி உள்ளது. சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள், பெண்களுக்கான மாணவர்கள் விடுதியும் உள்ளது. இந்த பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரியில் கடந்த 6-ம் தேதி முதலாமாண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் பீளமேடு போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி மாதவன், மணி, வெங்கடேசன், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.

கல்லூரிகளில் புதிதாக வரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கிண்டல் செய்வதுதான் ராகிங். ஆனால் ஒரு கட்டத்தில் இவை வன்முறையாக மாறியது. மோசமான ராகிங் கொடுமையால் சிலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர். நாவரசு என்ற மாணவன் தற்கொலைக்கு பிறகு இந்த ராகிங் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் சில கல்லூரிகளில் சில மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கே தெரியாமல் இது போன்ற ஒரு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.