கேக் தொழிற்சாலைக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு.. லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர்.. பரபரப்பு வீடியோ!

 

கோவையில் உள்ள கேக் தொழிற்சாலைக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பை பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டார்.

கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம், கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் தொழிலாளி ஒருவர் இருக்கையில் அமர்ந்த பொழுது, காலுக்கு அடியில் ஒரு பாம்பு புகுந்து சென்று இருக்கிறது. பதற்றம் அடைந்த தொழிலாளி, பாம்பைப் பார்த்து திகைத்து நின்றிருக்கின்றார்.

உடனடியாக பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீனுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன், அறைக்குள் வந்த பாம்பு அதிக விஷம் உடைய, கண்ணாடிவிரியன் பாம்பு என்பதனை தெரிந்து கொண்டார். உடனடியாக அந்தப் பாம்பை 5 அடி நீள கண்ணாடிவிரியன் பாம்பை பாதுகாப்புடன் பிடிக்க திட்டமிட்டு இருக்கின்றார்.

அதன்படி, பாம்பு ஒரு பைக்குள் அடைக்க, ஒரு சாக்கு பையை எடுத்துக் கொண்ட ஸ்நேக் அமீன், பிளாஸ்டிக் பாட்டிலை அறுத்து, சாக்குப் பையின் முகப்பில் கட்டி, பாம்பு உள்ளே செல்வது போன்று பையை இலகுவாக வடிவமைத்தார். அந்த பாம்பு செல்லும் இடத்தில் சாக்கு வைத்து, மெல்ல மெல்ல பாம்பை உட்செல்ல வைத்து, அந்த சாக்குக்குள் பாம்பு சென்றவுடன் பாதுகாப்பாக சாக்கு பையை கட்டினார்.

 பாம்பு உட்புகுத்தப்பட்ட சாக்கின் முகப்பு பாதுகாப்புடன் கட்டப்பட்ட நிலையில், பாம்பின் சீற்றம் தணியாமல் சீறிக்கொண்டே இருந்த நிலையில் அதை பாதுகாப்புடன் கையாண்டனர். கொடிய விஷம் உடைய கண்ணாடிவிரியன் பாம்பு, கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டு, அடர் வனப்பகுதியில் விடப்பட்டன.

இது குறித்து பாம்பு பிடி வீரரான் ஸ்நேக் அமீன் கூறுகையில், “கண்ணாடி விரியன் பாம்புகள், மலைப்பாம்புகள் போல் இருப்பதனால் மக்கள் அறியாமல் இதனை பிடிக்க முற்படுகின்றனர். இந்த வகை பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை என்பதனால் பொதுமக்கள் இந்த வகை பாம்புகளைத் தாமாக பிடிக்க வேண்டாம். பாம்பு பிடி வீரர்கள், தீயணைப்புத்துறையினர் அல்லது வனத்துறையினர் ஆகியோரின் உதவி இல்லாமல் இருப்பிடத்திற்குள் புகும் பாம்புகளை பிடிக்க முற்பட வேண்டாம்” என அறிவுறுத்தினார்.