வெடி மருந்து வெடித்து சிதறி விபத்து.. பைக்கில் சென்றபோது விபரீதம்!
மேல்மலையனூரில் இன்று காலை பைக்கில் வைத்திருந்த வெடி மருந்து திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஜே.ஜே நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிவகாசி மற்றும் குட்டி. இவர்கள் பறவைகள் வேட்டையாடுவதற்காக வெடிமருந்தினை பைக்கில் எடுத்துக்கொண்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த வண்டியை இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான மளிகை கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். அப்போது பைக்கின் பக்கவாட்டில் தொங்க விட்டிருந்த பை சைலன்சர் மீது உரசியதில் பையில் வைத்திருந்த வெடிமருந்துகள் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதன் காரணமாக பைக் தீப்பற்றி எரிந்தது. மேலும் மளிகை கடையின் முன்புறமும் சேதமடைந்தது. இந்த வெடிவிபத்தின்போது கடை முன்பு நின்றிருந்த குட்டி, சிவகாசி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளத்தி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். திடீரென பைக்கில் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.