பிறை தெரிந்தது.. தமிழ்நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்

 

தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாள்காட்டியின்படி 9வது மாதமான ரமலானில் இஸ்லாமியர்கள் அனைவரும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பார்கள். கட்டாயம் அனைவரும் இதைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கோருகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் நேற்று ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.