குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சியின் கொள்ளுப்பேரன்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

 

குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் வ.உ.சி. கொள்ளுப்பேரன் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு இருக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இருப்பினும், வெள்ளப்பெருக்கில் அஸ்வின் என்ற சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றாலம்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அருவிகள் மற்றும் அணைப் பகுதிகள் மறுஉத்தரவு வரும் பொதுமக்கள் குளிக்கத் தடைவிதித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவிட்டார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றால அருவியில் உயிரிழந்த சிறுவன்  அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சியின் கொள்ளுப்பேரன் என தகவல் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதி, விடுமுறையில் இருந்த அஸ்வின் சமீபத்தில் தென்காசி மேலகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அஸ்வினின் தந்தை குமார் வங்கியில் வேலை பார்த்து வருவதாகவும், தற்சமயம் மகனின் இறப்பு காரணமாக குடும்பத்தினர் சோகத்தில் இருப்பதால் இது தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.