ஆசையாக வாங்கிய Bike... மகனை பறிகொடுத்த பெற்றோர்.. ஒரே மாதத்தில் நடந்த துயர சம்பவம்!!

 

திருச்சியில் மினி சரக்கு லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர். இவர் கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சிவா (18) என்ற மகன் இருந்தார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், சங்கர் தனது மகனுக்கு புதிய கேடிஎம் பைக் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் தனது பைக்கில் கல்லூரிக்கு சென்றார். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து நாகமங்கலம் பகுதிக்கு காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு லாரி இவர் மீது மோதியது.

இதில் சரக்கு லாரியில் சிக்கிய கேடிஎம் பைக் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று, சாலை யோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிகண்டம் போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன் மினி சரக்கு லாரியில் சிக்கி இருந்த சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மதுரையில் இருந்து திருச்சி, திருச்சியில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அம்பேத்கர் நகர் அருகே உள்ள கட் ரோட்டில் திரும்பி செல்கிறது. இதனால் அதிகளவு இங்கு விபத்து ஏற்படுகிறது. விபத்தை தவிர்க்க போக்குவரத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.