7-வது மலையில் இருந்து விழுந்து வாலிபர் பலி.. வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்

 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் 7வது மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறி சென்றால், அங்கு காட்சியளிக்கும் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கலாம். இரவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்றாலும், பங்குனி மாதத்தில் இந்த மலைக்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்றனர். இதற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார் (31). இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார். பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு இருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். 

அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.